ஆபேல் இரத்தமும் / இயேசுவின் இரத்தமும் / நன்மையானவைகளை பேசும் இரத்தம். (பகுதி -1)
ஆபேல் இரத்தமும் / இயேசுவின் இரத்தமும் / நன்மையானவைகளை பேசும் இரத்தம். (பகுதி -1)
"நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்" (எபிரெயர் 12:22-24).
ஆமென். இந்த வேதப்பகுதியை தொடர்ந்து வாசியுங்கள், இயேசுவின் இரத்தத்தைக் குறித்த ஒரு அற்புதமான வெளிப்பாடு இந்த பகுதியிலே அடங்கியிருக்கிறது. இங்கு இயேசுவின் இரத்தத்தை 'தெளிக்கப்படும் இரத்தம்'என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த இரத்தம் ஆபேலின் இரத்தம் பேசினதைக் காட்டிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம் என்று சொல்லியிருக்கிறதே அதன் அர்த்தம் என்ன என்பதை இன்று முதல் கவனிக்க இருக்கிறோம். இந்த போதனையிலே முதலில், எபிரேய நிருபத்தில் ஏன் என்ன என்பதை நினைப்பூட்ட விரும்புகிறேன்.இந்த நிருபம் எபிரெய மார்க்கத்திலிருந்து, அதாவது யூதர்களாயிருந்து கிறிஸ்தவர்களாய் மாறினவர்களுக்கு எழுதப்பட்ட ஒரு நிருபம்.
ஆகவேதான் இது புதிய ஏற்பாட்டு நிருபங்களில் சற்று வித்தியாசமான நிருபம்.ஏனென்றால், இந்த ஜனங்களுக்கு ஏற்கனவே பழைய ஏற்பாடு நன்றாகத் தெரியும்.ஆகவே இந்த நிருபத்தின் ஆசிரியர் பழைய ஏற்பாடு language-ஐ பயன்படுத்தி அநேக காரியங்களை விளக்கிச் சொல்லுகிறார்.பழைய ஏற்பாட்டை நன்றாக தெரிந்தவர்கள் இதைமிகவும் நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். எனக்கு பழைய ஏற்பாட்டை அவ்வளவாகத் தெரியாது என்று சொல்லுகிறவர்களுக்கு சில அடிப்படை காரியங்களைச் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.இந்த நிருபம் பழைய ஏற்பாடு நன்றாக தெரிந்தவர்களுக்கு எழுதப்பட்டது.ஆகவேதான் இந்த வசனங்கள் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
சிலருக்கு மேலே வாசித்த இந்த வசனங்கள் அர்த்தமே இல்லாதது போன்று மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் இதை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம். யூதர்களாயிருந்து கிறிஸ்தவர்களான முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இது எழுதப்பட்டது. அன்றைக்கு யூதர்கள் இவர்களைப் பார்த்து பரியாசம் பண்ணினார்கள். நம்முடைய மார்க்கம் எப்படிப்பட்ட மார்க்கம்! நமக்கு ஒரு பெரிய தேவாலயம் இருக்கிறது; அங்கு நமக்கு பலிகள், முறைமைகள் இருக்கிறது, பிரதான ஆசாரியன் இருக்கிறார்,ஏராளமான பண்டிகைகள் இருக்கிறது, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மோசேயே தேவனிடத்தில் சென்று அதைப் பெற்றார்.தேவன் தம்முடைய கைவிரலினால் அதை கற்பலகைகளில் எழுதிக்கொடுத்தார். அப்பேர்ப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட ஜனம் நாம்.
நாம் ஒரு பெரிய மதத்தைச் சேர்ந்தவர்கள். யூதமார்க்கம் என்பது லேசானது அல்ல. நமக்கு எப்பேர்ப்பட்ட பாரம்பரியம் இருக்கிறது! ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவன் நம்முடைய தேவன்.நாம் ஆபிரகாமின் சந்ததி, மோசே நமக்கு பெரிய தலைவர்.நம்முடைய முன்னோர்கள் யோசுவா போன்றவர்களுக்குக் கீழ் வாழ்ந்தார்கள். நமக்கு எப்பேர்ப்பட்ட வாக்குத்தத்தங்கள் இருக்கிறது!
இதையெல்லாம் விட்டு விட்டு சிலுவையில் தொங்கின இயேசுவை நம்பி நீங்கள் போகின்றீர்களே!இவர்களிடம் தேவாலயம், பலிகள், முறைமைகள், பண்டிகைகள் இருக்கிறதா? பிரதான ஆசாரியன் என்று யாராவது இருக்கிறார்களா?இதுபோன்று ஒரு பெரிய மதம் இருக்கிறதா? இவர்களுக்கு மோசே போன்று யாராவது முன்னோர்கள் இருக்கிறார்களா? நீங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றி போகின்றீர்களே! இந்த கிறிஸ்தவம் எதைப் பற்றியது? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதுதான் கிறிஸ்தவமா?
யூதமார்க்கம் அப்படி அல்ல. அதில் தேவாலயம், பண்டிகை, ஆட்டை பலியிடுவது, இரத்தத்தை சிந்துவது, தெளிப்பது போன்றதெல்லாம் இருக்கிறது. இவ்வளவு பெரிய மதத்தை விட்டுவிட்டு சிலுவையில் நிர்வாணமாய் அவமானப்பட்டுதொங்கி, தோல்வியில் மரித்த அவரை ஆண்டவர் என்று வணங்குகிறீர்களே! அவரை இரட்சகர் என்று சொல்லுகிறீர்களே!என்று இவர்களை நிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் வாழ்ந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிருபத்தின் ஆசிரியர் அவர்களுக்கு தைரியம் ஊட்டுவதற்கு இதை எழுதுகிறார். இதை கவனித்தாலே இந்த நிருபத்தை முதலிலிருந்து வாசித்துப் பார்க்கும்போது இது நன்றாக விளங்கும்.அவர்களுக்கு தைரியம் ஊட்டும்படியாய் ஆசிரியர் இதை எழுதுகிறார்.
எனவேதான் இந்நிருபத்தின் ஒவ்வொரு அதிகாரங்களிலும் இயேசு எப்படி பழைய ஏற்பாட்டு காரியங்களைக் காட்டிலும் மேலானவர் என்பதை எழுதுகிறார். முதல் இரண்டு அதிகாரங்களில் தேவதூதரைக் காட்டிலும் மேலானவர் என்பதை எழுதுகிறார்.
3-ஆம் அதிகாரத்தில் மோசேயைக் காட்டிலும் மேலானவர் என்பதை எழுதுகிறார். அதன் பிறகு அங்கு ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட்டது, இங்கே இயேசுவின் இரத்தமே சிந்தப்பட்டிருக்கிறது என்றும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைக் காட்டிலும் நமக்கு மேலான வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இது அதைக் காட்டிலும் மேலான உடன்படிக்கை என்றும் எழுதுகிறார்.
எபிரெயர் நிருபத்தை முழுவதுமாக வாசிக்க, வாசிக்க இதுபோன்ற trend-இல் தான் போகும். அதையும் இதையும் ஒப்பிடுகிறார்.
ஏனென்றால் அவர்கள், எங்களுடைய மார்க்கம் தான் மேலானது, உங்களுடைய மார்க்கத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லுகிறார்கள்.ஆனால் ஆசிரியர், இயேசுவில் எவ்வளவு பெரிய அற்புதமான, உன்னதமான காரியங்கள் இருக்கிறது என்பதை கவனி என்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், அந்த பழைய ஏற்பாட்டு முறைமைகள், தேவாலயம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவையெல்லாம் இயேசுவைக் குறித்த நிழலாட்டங்கள் தான்.
இப்போது நிஜமே வந்துவிட்டது.நிழல் பெரியதா? நிஜம் பெரியதா? நான் உள்ளே வரும்போது என் நிழல் தெரிகிறது, நான் வந்துவிட்டேன் என்று என் நிழலைப் பார்க்கிறீர்கள்.ஆனால் நானே வந்துவிட்ட பிறகு நிழலைப் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?நிழலை விட்டு விடுவீர்கள். ஏனென்றால் ஆளே இருக்கும்போது ஆளுடைய நிழல் எதற்கு?
அதுபோலத்தான் அதுவரை அவர்கள் நிழலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.நிழல் முக்கியமாயிருந்தது.ஏனென்றால், நிழலைப் பார்த்துதான் விஷயம் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது. அதில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் நிஜம் வந்த பிறகு நிழலுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.நிழலைக் காட்டிலும் நிஜம் மேலானதாய் இருக்கிறது.இதைத்தான் ஆசிரியர் எபிரெயர் நிருபத்தில் சொல்ல வருகிறார்.
இதைச் சொல்லிக்கொண்டே வந்து 11 அதிகாரங்களை முடித்து விட்டார். இப்போது 12-ஆம் அதிகாரத்தில் உச்சக்கட்டத்தின் (climax) அருகே வருகிறார். அடுத்த அதிகாரத்தில் கடிதம் முடிவடையப்போகிறது. இன்னும் போகப்போக வேகம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதில் நீங்கள் எப்பேர்ப்பட்ட இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதைப்பற்றி இங்கே சொல்லுகிறார். அப்படிச் சொல்லும் போதுதான் இங்கு 'நீங்களோ' என்று சொல்லுகிறார். இந்த வார்த்தை மிகவும் முக்கியம். இது ஒப்பிட்டுச் சொல்லுகிற வார்த்தை.
அவர்கள் சீனாய் மலையிடம் வந்தார்கள்.ஆண்டவர் பேசினவுடனே, "அய்யய்யோ, அவரைப் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்; நீங்களே போய் கேட்டுவிட்டு வந்து என்னவென்று சொல்லுங்கள்; எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்கள்.அந்த சத்தத்தையும், இரைச்சலையும் கேட்டவுடன் அவர்கள் அலறிவிட்டார்கள்.பக்கத்தில் செல்வதற்கே அவர்களுக்கு பயமாயிருந்தது.அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு அவர்கள் வந்தார்கள்.
எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், "நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்" என்கிறார்.
அதாவது, நீங்கள் ஏதோ ஒரு தேவாலயத்திற்கு வரவில்லை அல்லது சீனாய் மலையிடம் வரவில்லை. நீங்கள் தூரத்திலிருந்து தேவனை தரிசிக்கிறவர்கள் அல்ல என்கிறார்.அன்றைக்கு ஜனங்கள் அப்படித்தான் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரதான ஆசாரியன் மட்டும் தான் வருஷத்திற்கு ஒருமுறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே சென்றான்.
ஆசாரியர்கள் மட்டும் தான் தேவாலயத்திற்குள் சென்று சில காரியங்களைச் செய்தார்கள். ஜனங்கள் வெளியே நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். உள்ளே எவருக்கும் அனுமதி கிடையாது. உள்ளே கால் எடுத்து வைத்தால் செத்து விடுவார்கள். அப்பேர்ப்பட்ட காரியம் தான் பழைய ஏற்பாடு. ஆகவேதான் ஆசிரியர் 'நீங்களோ' என்கிறார்.
நீங்கள் எப்படிப்பட்ட இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதை பாருங்கள் என்கிறார். நீங்கள் பரலோகத்திற்கே வந்துவிட்டீர்கள்; தேவன் இருக்கிற இடத்திற்கே வந்துவிட்டீர்கள்.அந்த நகரத்தை சீயோன் மலை, ஜீவனுள்ள தேவனுடைய நகரம், பரம எருசலேம் என்று மூன்று விதமாக வர்ணிக்கிறார். அதன்பின் அங்கு யார் இருக்கிறார்கள் என்பதை வர்ணிக்கிறார். ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை, பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகள் அங்கு இருக்கிறார்கள் என்கிறார். முதலில் அது என்ன இடம் என்றும், அதன்பின் அங்கு யார் இருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார்.இப்படிச் சொல்லிவிட்டு,'யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும்' என்றும் சொல்லுகிறார்.
இப்போது innermost sanctum-க்கு வந்தாயிற்று. அவர் உள்ளே தேவனுடைய சமுகத்திற்கே கொண்டுவந்து விட்டார்.மேலும்,'புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும்' என்று சொல்லுகிறார்.
ஆக,அங்கு தேவன் இருக்கிறார் என்பதும், இயேசு இருக்கிறார் என்பதும் புரிகிறது. ஆனால் அங்கு மூன்றாவதாக, ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தம் உள்ளது என்று பார்க்கிறோம்.
இந்த இரத்தத்திற்கு ஏன் அவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
தேவன், இயேசு, அதன்பின் இரத்தம் அங்கு இருக்கிறது என்று ஆசிரியர் சொல்லுகிறார்.
அங்கு தேவன் இருந்தால் போதாதா?
அவருடைய குமாரனாகிய, நமக்காக சிலுவையிலே மரித்த இயேசு அங்கு இருந்தால் போதாதா?
இரத்தமே அங்கு இருக்கிறது என்கிறார். நாம் (எந்த) இரத்தத்தின் வல்லமையைப் பற்றி இங்கு படித்துக் கொண்டிருக்கிறோம். இது மிக முக்கியமான சில சத்தியங்களை நமக்கு வெளிப்படுத்துகிறது.இதை நாம் கவனிக்க வேண்டும்.இதை வாசித்தவுடனேயே சிலருக்கு இது என்னவென்று விளங்காது.😀
இந்த பாஷையே வேறு விதமாக இருக்கிறது என்று திகைத்துப் போயிருப்பார்கள்.இதை இப்போது unpack பண்ணுவோம். இது என்னவென்று சரியாக எடுத்துக் காண்பிப்போம்.தேவன் இதில் தான் விஷயத்தை உள்ளே வைத்திருக்கிறார். வேதம் இப்படிச் சொல்லும்போது நன்றாக கவனிக்க வேண்டும்.அங்கு தேவன் இருக்கிறார், இயேசு இருக்கிறார். மூன்றாவதாக, 'தெளிக்கப்படும் இரத்தம்' என்று சொல்லப்படுகிற ஆபேலின் இரத்தம் பேசினதைக்காட்டிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவினுடைய இரத்தம் அங்கேவைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய திட்டத்தில் இந்த இரத்தத்திற்கு எவ்வளவு பெரிய ஒரு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இன்றைக்கு சிலர், "இரத்தமே வேண்டாம், இரத்தத்தைப் பற்றியே பேசாதீர்கள்" என்று சொல்லுகிறார்கள்.ஒருவர், "என்ன இந்த மதம் இரத்தத்தைப் போதிக்கிறது? இது காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறது"என்கிறார். கிடையாது!
இரத்தத்தில் அநேக விஷயங்கள் இருக்கிறது.இரத்தத்தில் தான் உயிர் இருக்கிறது.அவர் அந்த உயிரை நமக்காகக் கொடுத்தார்."பாவத்தின் சம்பளம் மரணம்" என்றும்,"பாவம் செய்கிற ஆத்துமா சாகவே சாகும்" என்றும் எழுதியிருக்கிறது.ஆகவே இந்த இரத்தம், அது சிந்தப்பட்டது என்பதெல்லாம் மிகவும் முக்கியம்.ஏனென்றால் நம்முடைய பாவத்திற்காக அவர் மரித்தார். அதன் தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார்.அவர் மரித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?
இரத்தம் சிந்தப்பட்டது என்பதுதான். அந்த ஆதாரம் என்றென்றைக்குமாக பிதாவினுடைய சந்நிதானத்திலே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த இரத்தம் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பது ஏதோ அருங்காட்சியகத்தில் (museum) வைத்தது போன்று அல்ல. அந்த இரத்தம் அங்கே இருந்துகொண்டு ஆபேலின் இரத்தம் பேசினதைக்காட்டிலும் நன்மையானவைகளைப் பேசிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் அடுத்த பகுதி -2 இல் விளக்கப் போகிறேன்.
#குறிப்பு : இப்பதிவும், தலைப்பும் சம்மந்தமில்லாமல் ஆரம்பிக்கும். விளக்கம் சம்பூரணமாய் முடிய எபிரேய நிருபம் பற்றி இங்கு விளக்கவேண்டியதாயிற்று..
Comments
Post a Comment