ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். - (சங்கீதம் 46:1).
ஐரோப்பாவின் வடக்கில் உள்ள நாடுகளில் காடுகள் ஏராளம். அங்குள்ள ஒரு காட்டிற்கு சென்று, இன்பமாக நாளை கழிக்கலாமென்று ஒரு நண்பர் கூட்டம் எண்ணியது. அவர்கள் சுமார் பதினைந்து பேர் இருப்பார்கள். இரண்டு மூன்று வீட்டினர் ஒன்றாக வந்திருந்தனர். சமைத்த பண்டங்களை சாப்பிட்டபின் பேசி கொண்டிருக்கையில் தொலைவில் கண்ட ஒரு காட்சி அவர்களை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. என்னது புகை? நெருப்பு? அக்காட்டில் ஒரு பகுதியில் மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்ததன் விளவாக தீப்பொறி பறந்தது. அது பெருந்தீயாக காட்டையே பற்றி கொண்டது. அதை கண்ணுற்ற அவர்கள் தங்களுக்கு இறுதிகட்டம் வந்தது என்று அறிந்து வேதனைப்பட்டனர்.
இந்த நிலையில் இத்தீயை சமாளிக்க சிறுவன் ஒருவன் முன் வந்தான். கையிலிருந்த தீப்பெட்டியினுள் ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி பின்பு சருகுகள் நிறைந்த இடத்தில் அதை போட்டான். காட்டுத்தீ பரவி தங்களை நோக்கி வருவதற்குள் இந்த பையன் வேறு பக்கத்திலேயே நெருப்பு வைத்து விட்டானே என்று எல்லாரும் அவனை அடித்து விட்டார்கள். அதற்குள் அவன் வைத்த நெருப்பு தன் வேலையை முடித்து விட்டது. சுமார் ஐம்பது அடி சுற்றளவிலுள்ள புல் பூண்டுகளெல்லாம் வெந்து சாம்பலாயின. அங்குள்ளளவர் மத்தியில் நின்று என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். அப்போது, காட்டுத்தீ அவர்களை சுற்றிலும் பரவி நன்றாக எரிந்தது. ஆனால் என்ன அதிசயம், அவர்களிடம் வரவேயில்லை. ஏனென்றால் அவர்கள் நின்றிருந்த இடம், வெந்து சாம்பலான இடம், காட்டு தீக்கு அங்கு இரை ஒன்றுமில்லை. பையன் வைத்த நெருப்பு ஏற்கனவே தன் வேலையை முடித்ததால் அந்த இடம் பாதுகாப்பானதாக மாறவே அனைவரும் பேராபத்தினின்று காப்பாற்றப்பட்டனர்.
ஆம் இதை போன்று தான் பாவ விளைவுகளால் நமக்கு எதிராக புறப்பட்ட நரக தீயினின்றும் நாம் பாதுகாக்கப்படுகின்றோம். அது எப்படி? பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக்கியேல் 18:4). பாவத்தின் சமப்ளம் மரணம் (ரோமர் 6:23) இறுதியில் நியாயந்தீர்க்கப்பட்டு, முடிவில்லா வேதனையுள்ள என்றென்றும் தீ எரிந்து கொண்டிருக்கும் நரகத்தில் தள்ளப்பட வேண்டும். இதுவே மனிதனுக்கு ஏற்பட்ட தீர்ப்பாயிருந்தது.
ஆனால் தேவனோ, நம்மில் மிகவும் இரக்கம் உள்ளவராய், காணப்படுகிறார். நம்மை பாவ சாபத்தினின்றும், கொடிய நரகாக்கினையில் இருந்தும் விடுவிக்கும்படியாக இயேசு என்னும் நாமத்தில் இவ்வுலகில் வந்து பிறந்தார். முறையாக நாம் பெற வேண்டிய தண்டனையை இயேசு தாமே தன் சரீரத்தில் ஏற்று கொண்டார். முழு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குடடியாக நமக்காக பலியானார் (யோவான் 1:29). இதை ஒரு மனிதன் ஏற்று இயேசுவண்டை வரும்போது, தீமையினின்று காக்கப்படுவது மட்டுமல்ல, கூடவே இளைப்பாறுதலையும் இயேசு தருகிறார். இந்த இளைப்பாறுதலை பெற்று கொள்ள இன்றே இயேசுவை அண்டி கொள்ளுங்கள்.
தேவன் கொடுக்கும் இந்த அருமையான இலவசமான இளைப்பாறுதலை ஏற்று கொள்ளாதபடி, நமக்காக தமது சரீரத்தில் கிறிஸ்து வாரினால் அடிக்கப்பட்டார். பாடுகளை சகித்தார் என்பதை விசுவாசியாத ஒரு கூட்ட ஜனம், தங்களை தாங்களே, சங்கிலிகளால் அடித்து கொண்டு, இரத்தம் வரும்வரை தங்களை துன்புறுத்தி கொண்டு, தங்கள் முதுகுகளில் கம்பிகளை மாட்டி கொண்டு, இரதங்களை இழுத்து, பாடுகளை சுமந்து அப்படியாவது தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்காதா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அப்படி எல்லாம் உடலை வருத்தி இரட்சிப்பை பெற்று கொள்ளவே முடியாது. ஏற்கனவே அவற்றை சுமந்து தீர்த்த தேவன் ஒருவர் உண்டு. அவருடைய பாவமில்லாத இரத்தத்தால் நம்முடைய பாவங்கள் கழுவப்படுகிறது. இரட்சிப்பு நமக்கு அருளப்படுகிறது.
கிறிஸ்தவரல்லாத ஒருவர் சமீபத்தில் என்னிடம், நீ நரகத்திற்கா, பரலோகத்திற்கா எங்கு செல்லப்போகிறாய்' என்று கேட்டார். நான் உறுதியாக, ' நிச்சயமாக நான் பரலோகத்திற்கு தான் செல்வேன்' என்று கூறினேன். அதற்கு அவர் ' என்ன உன் கடவுள் உன்னிடம் அப்படி சொன்னாரா' என்று கேட்டார். நான் அதற்கு, 'நான் இரட்சிக்கப்பட்டேன், அதனால் நான் நரகத்திற்கு செல்லமாட்டேன்' என்றேன். 'எனக்கு புரியவில்லை, இரட்சிப்பு என்றால் என்ன' என்று கேட்டார், நான் அவரிடம், 'இரட்சிப்பு என்றால், இயேசு எனக்காக இரத்தம் சிந்தினார், நான் அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டபடியால் இரட்சிக்கப்பட்டேன், ஆகையால் நான் நிச்சயமாக நரகத்திற்கு செல்ல மாட்டேன், பரலோகத்திற்கு தான் செல்வேன்' என்று உறுதியுடன் கூறினேன்.
அவரால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை, கடந்து போய் விட்டார். கூட வேலை செய்யும் மற்றவர்கள், 'நீ எப்படி அப்படி உறுதியாய் சொல்ல முடியும், நீ பரலோகத்திற்கு செல்வாய் என்று, எங்களால் அப்படி நிச்சயமாக கூற முடியாது' என்று சொன்னார்கள். அவர்களும் கிறிஸ்தவர்களே! நான் கூறினேன், 'நம்முடைய கிரியைகளோ, நம்முடைய எந்த செயல்களும் நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டால் மாத்திரமே பரலோகம் செல்ல முடியும்' என்று அழுத்தமாக கூறினேன். கிறிஸ்தவர்களாயிருந்தாலும், இன்னும் இரட்சிப்பை குறித்து அறியாத அந்த கூட்டத்தினருக்காக ஜெபிக்க வேண்டும் என்று நினைத்தவாறே என் வேலையை தொடர்ந்தேன்.
கிறிஸ்தவர்களாயிருந்தும், கிறிஸ்துவின் இரட்சிப்பை அறியாத கூட்டம் உண்டு. கிறிஸ்தவர்களல்லாதவர்களாக இருந்து, அவருடைய இரட்சிப்பை அறியாத மக்கள் ஏராளாமாயுண்டு. கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாக இருக்கும் இந்த நாட்களில், இந்த மக்களும் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று நாம் ஜெபிக்க வேண்டும். நம்மோடு கூட வேலை செய்பவர்களில் அநேகர் கிறிஸ்துவை அறியவில்லையே, நாம் சும்மா நான் மட்டும் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று திருப்தியோடு வாழ்ந்து விட முடியுமா? கூட வேலை செய்கிறவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று பெருமூச்சுகளோடு, கர்த்தரிடம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறவர்களாக நாம் மாற வேண்டும். நம் ஜெபத்தை கேட்டு கர்த்தர் அவர்களை இரட்சிப்பார். அவர்களையும் கிருபையாக ஏற்று கொள்வார். ஆமென் அல்லேலூயா!
Comments
Post a Comment