கிருபையால் நிலைநிற்கிறோம்

1. கிருபையால் நிலைநிற்கிறோம்

மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. - (ரோமர் 5:16).

ஒரு மனிதன் மரித்து பரலோகத்திற்கு சென்றார். அங்கு பரிசுத்த பேதுருவை வாசலில் கண்டார். அப்போது பேதுரு அவரை பார்த்து, “பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். நீ செய்த எல்லா நன்மையான காரியங்களை குறித்தும் சொல். நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களை கொடுப்பேன். அப்படி மதிப்பெண்கள் போடப்பட்டு, 100 மதிப்பெண்கள் ஆனவுடன் நீ பரலோகம் செல்லலாம்” என்று கூறினார்.

அந்த மனிதன், தான் செய்த நன்மைகளை செய்ய தொடங்கினார். “நான் ஒரே மனைவியை உடையவன். அவளோடு 50 வருடம் குடித்தனம் நடத்தினேன். அவளுக்கு மனதளவில் கூட நான் துரோகம் செய்ததில்லை” என்று கூறினார். அதற்கு பேதுரு, “ஓ, மிகவும் நல்லது. அதற்கு 3 மதிப்பெண்கள”; என்று கூறினார். “என்னது 3 மதிப்பெண்தானா?” என்று கேட்டுவிட்டு, “நான், ஒவ்வொரு வாரமும் தவறாமல், ஆலயத்திற்கு சென்றேன். என்னுடைய தசமபாகத்தை தவறாமல் சபைக்கு கொடுத்து வந்தேன்” என்று கூறினார்.

அப்போது பேதுரு, “வாவ், நல்ல காரியம், நிச்சயமாக அதற்கு ஒரு மதிப்பெண் தரலாம்” என்று கூறினார். “என்னது! ஒரு மதிப்பெண்தானா? சரி இதற்காகவாவது நீங்கள் அதிக மதிப்பெண்கள் தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன், நான் வயதானவர்களுக்கென்று, முதியோர் இல்லம் வைத்து, அவர்களை இலவசமாக பராமரித்தேன்” என்று கூறினார்.

அதற்கு பேதுரு, “நல்ல காரியம் செய்தீர்கள், சரி அதற்கு இரண்டு மதிப்பெண்கள் தரலாம்” என்று கூறியபோது, அந்த மனிதர், மிகவும் சத்தமிட்டு, “ஐயோ, நான் செய்த நன்மையான காரியங்களுக்கு இவ்வளவு மதிப்பெண்கள் தான் கிடைக்கும் என்றால், நான் பரலோகத்திற்கு செல்லவே முடியாது, யார் தான் செல்ல முடியும்? கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே நான் பரலோகம் செல்ல முடியும்!” என்று கூறினார். அதை கேட்ட பேதுரு, “நீ இப்போது உள்ளே செல்லலாம்” என்று கூறினார்.

ஒருவரும் தங்களுடைய நற்செய்கைகளினாலே ஒருக்காலும் பரலோகத்தை சென்றடைய முடியாது. நற்கிரியைகளினாலே பரலோகம் கிடைப்பதும் இல்லை. நாம் செய்கிற தான தர்மங்களும், கடவுளிடம் வேண்டி செய்கிற பொருத்தனைகளும் நம்மை ஒருநாளும் பரலோகத்திற்கு கொண்டு சேர்க்காது. பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரட்சிக்கப்படாமல் ஒருவரும் பரலோகம் செல்ல முடியாது, முடியவே முடியாது. இயேசுகிறிஸ்து கூறினார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” - (யோவான் 14:6) என்று திட்டவட்டமாக கூறினார். மற்றும் அவர் “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவான் 10:9) என்றும் கூறினார்.

அப்படி கிறிஸ்து கொடுக்கும் இலவசமான இரட்சிப்பை பெற்றவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனை அடையும் பாக்கியத்தை பெறுகிறார்கள். இயேசுகிறிஸ்து ஜீவனை தரும் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்க, உலகில் 90 சதவிகிதம் பேர் அதை விட்டுவிட்டு, சாத்தான் சொல்லும் பொய்க்கு செவிகொடுத்து, நித்திய ஜீவனை இழந்தவர்களாக மறுமைக்கு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது (எபிரேயர் 9:22) என்ற வேதவசனத்தின்படி, கிறிஸ்து நமக்காக தம்முடைய மாசற்ற இரத்தத்தை சிந்தி நமக்கு இரட்சிப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்றவர்கள் நித்திய ஜீவனுக்கும் பரலோகத்திற்கும் பாத்திரராகிறார்கள்.

‘கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’ - (எபேசியர் 2:8,9).

தேவ கிருபையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்க, நாம் செய்யும் எந்த நற்கிரியைகளினாலும், நாம் பரலோக ராஜ்ஜியத்தை சேர முடியாது. இரட்சிக்கப்பட்டபின் செய்யும் நற்கிரியைகளுக்கு தக்க பலனை கிறிஸ்து மீண்டும் வரும்போது கொண்டு வருவார். ஆனால் இரட்சிக்கப்படாமல் நாம் செய்யும் எந்த நற்கிரியைக்கும் எந்த பலனுமில்லை.

இரட்சிக்கப்பட்டு சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை செய்வோம். கர்த்தர் அதற்கு ஏற்ற பலனை நமக்கு நிச்சயம் தருவார். ஆமென் அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று