அவர் நேரத்தில்
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).
ராபர்ட் மேத்தியூ என்பவர், தனது மனைவி கர்ப்பிணியாய் இருப்பதை சில வாரங்களுக்கு முன்தான் குடும்பமாய் அறிந்திருந்தனர். அவர்கள் விர்ஜினியா என்னும் அமெரிக்க நகரத்தில் வசித்து வந்தார்கள். மனைவி கலிபோர்னியாவில் உள்ள தன் சகோதரியை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தபடியால், அதற்கென்று திட்டமிட்டு அவர்கள் அடுத்த நாள் தயாரானார்கள். அன்று செப்டம்பர் மாதம் 10ம் தேதி.
அவர்கள் தயாராகி, காரில் போய் கொண்டிருந்தபோது, இருவரும் ஜெபித்தார்கள். தன் மனைவியின் இந்த கலிபோர்னியா போய் வரும் திட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்று அவர் ஜெபித்து ஆமென் என்று சொல்வதற்கும், காரின் டயர் வெடிப்பதற்கும் சரியாக இருந்தது. உடனே வேகமாக அந்த காரின் டயரை மாற்றி, புறப்பட்டு ஏர்போர்ட் போவதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய பிளேனை மிஸ் பண்ணி விட்டார்கள்.
அடுத்த நாள் ராபர்ட் மேத்தியூவின் அப்பாவிடமிருந்து டெலிபோன் வந்தது. எந்த பிளேனில் அவருடைய மனைவி வருவதாக இருந்தது என்றும், அந்த பிளேனின் நம்பரையும் கேட்டபோது, அந்த பிளேன்தான், அந்த இரட்டை மாடி கட்டிடத்தில் மோதிய ஒரு பிளேன் ஆகும் என்று கூறினார். கர்த்தர் எப்படி தங்களை காத்து கொண்டார் என்று அவர்கள் நினைத்திருந்த போது, அவர்களின் அப்பா, சொன்னார், 'நான் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கபோவதில்லை, நான் போய் அங்கு கட்டிடம் விழுந்து, அதில் மாட்டி கொண்டு இருப்பவர்களை விடுவிக்கபோகிறேன்' என்று சொல்லி, போனை வைத்து விட்டார்.
அவர் ஒரு ஓய்வுபெற்ற நியூயார்க் தீயணைக்கும் படையை சேர்ந்தவர். அவர் அங்கு உதவி செய்ய போனதும், அங்கு அவர் சென்ற பிறகு எந்த செய்தியும் வராமல் அவர் மேல் கட்டிடம் விழுந்து இறந்து போனதும் பின்னால் வந்த செய்திகள். ராபர்ட்க்கு தேவன் தன் மனைவியை காத்தது பெரிய காரியமாயிருந்தாலும், தன் தகப்பன் இறந்தது குறித்து மிகவும் வேதனை, தேவன் மேல் கோபமாகவும் இருந்தது. ஏனென்றால் அவருடைய அப்பா இன்னும் இரட்சிக்கப்படவில்லை.
இரண்டு வாரங்களுக்கு பிறகு, வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அங்கு ஒரு தம்பதியர் ஒரு சிறு கைக்குழந்தையுடன் நின்றிருந்தனர். அவர்கள் 'உங்கள் தந்தைதானே ஜேக் மேத்யூ' என்று கேட்டார்கள். ஆம் என்றதற்கு, 'நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள் உண்டு' என்று கூறி, 'செப்டம்பர் மாதம் 11ம் தேதி, என் மனைவி அங்கிருந்த இடிபாடுகளுக்குள் மாட்டி கொண்டாள். உங்கள் தந்தைதான் பாடுபட்டு இவளை காப்பாற்றினார். அவர் அப்படி காப்பாற்றி கொண்டு இருக்கும்போதே, என் மனைவி உங்கள் தகப்பனுக்கு கர்த்தரை பற்றி சொல்லி, அவரை கர்த்தருக்குள் வழிநடத்தினாள்' என்று கூறினார். இதை கேட்டவுடன் ராபர்ட்டின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எத்தனை நல்ல ஆண்டவர் நம் தேவன்! அவர்மேல் அநியாயமாக கோபித்து கொண்டு இருந்தோமே என்று வெட்கப்பட்டார். தன் தந்தை கர்த்தரை அறிந்தவராய் நித்தியத்திற்கு கடந்து சென்றார் என்பது எத்தனை ஆறுதலான விஷயம்!
இந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவமாகும். இந்த காரியம் நடந்து இப்போது 9 வருடங்களாகி இருக்கலாம், ஆனால் நடந்தது நடந்ததே! கர்த்தர் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களின் சத்தத்தை கேட்டு புறம்பே போய் விடுகிற தேவனல்ல, நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிற தேவன்!
சர்வ வல்லமையுள்ள தேவனை மீறி காரியங்கள் எதுவும் நம் வாழ்வில் நடப்பதில்லை. அவருக்கு தெரியாமல் நம் தலையிலிருந்து ஒரு முடி கூட கீழே விழுவதில்லை. நாம் அவரை சார்ந்து ஜீவிக்கும்போது, நம் வாழ்வில் நடக்கும் தீமையான காரியங்களையும் நம் தேவன் நன்மையாக மாற்றி தருவார்.
என் வாழ்வில் ஏன் இந்த காரியங்கள் நடந்தது என்று திகைத்து கொண்டிருக்கிறீர்களா? வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா? இல்லை, தேவன் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நன்மையாக, செம்மையாக, முழுமையாக மாற்றிதருவார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28) என்று வசனம் கூறுகிறதல்லவா? ஆகையால் மனம் சோர்ந்து போகாதிருங்கள். 'நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?' (உபாகமம் 4:7). இப்படிப்பட்ட தேவனை பெற்றிருக்கிற நாம் எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் அவர் மேல் வைத்து அவருடைய நேரத்திற்காக காத்திருப்போம். அவர் நன்மையானவைகளையே நமக்கு தருவார். ஆமென் அல்லேலூயா!
Comments
Post a Comment