பாவ மன்னிப்பின் நிச்சயம்


அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.  - (அப்பொஸ்தலர் 10:43).

ஒரு வாலிபன் ஒரு கனவு கண்டான். அதில் அவன் ஒரு பிரகாசமான ஒரு இடத்தை கண்டு வியந்தான் பார்க்கும் எவரையும் தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்கு அது மகிமையாய் இருந்தது. அங்கிருந்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. உடனே இவனுக்கு தானும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. உடனே அதை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

மிக வேகமாக ஓடினான். களைப்பை பொருட்படுத்தாமல், ஓடினான். பாடல் சத்தமும் கீத வாத்தியங்களின் முழக்கமும் அவனது ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது, திடீரென்று அந்த வாலிபனுக்கும் பிரகாசமான இடத்திற்கும் நடுவாக ஒரு சுவர் வேகமாக எழும்பி கொண்டிருந்தது. அவன் அந்த சுவரை எப்படியாகிலும் தாண்டி விடலாம் அல்லது அந்த சுவர் மேலே வரும் முன் ஓடி விடலாம் என நினைத்து முன்னிலும் சற்று வேகமாக் ஓடினான். ஆனால் அந்த சுவர் மிக வேகமாக எழும்பி அந்த பிரகாசமான இடத்தையே மறைத்து விட்டது.

வாலிபன் என்ன செய்வது என்று அறியாமல் 'ஓ' வென்று அழுதான். அச்சுவரில் முட்டி முட்டி அழுதான். அப்போது அந்த சுவரில் அநேக சொற்றொடர்கள் எழுதப்படட்டிருப்பதை கவனித்தான். அதை உற்று பார்த்த போது, அதில் அவன்  சிறுவயதிலிருந்த செய்த பாவங்கள், பேசிய பொய்கள், களவுகள் பொறிக்கப்பட்டிருந்தன.

அவன் சிந்தையில் கற்பனையில் நினைத்த பாவக் காரியங்களும் இதில் எழுதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தபோனான். 'ஐயோ நான் இப்பாவத்தையெல்லாம் செய்யவில்லையே, மனதிற்குள் நினைத்து பார்த்து தானே மகிழ்ந்தேன்' என கதறினான். அவற்றை கையினால் அழித்து பார்த்தான். ஆனால் அவை அழிக்க முடியாதபடி பொறிக்கப்பட்டிருப்பதை எண்ணி குற்ற உணர்வினால் கூனி குறுகினான். தனது பாவத்தை யாரும் வாசித்து விடுவார்களோ என அங்கலாய்தான்.

அந்த நொடிப்பொழுதில் அவன் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றிற்று. 'எவ்வளவு கொடிய பாவத்தையும் இயேசு கிறிஸ்துவால் மன்னிக்க முடியும்' என்று.  உடனே அந்த இடத்தில் முழங்கால் படியிட்டு, தன் பாவங்களை மன்னிக்கும்படி கண்ணீரோடு ஜெபித்தான் மறு கணமே வானத்திலிருந்து ஒரு சொட்டு இரத்தம் இற்ங்கி வந்து அந்த சுவரில் மேல் விழுந்தது, அந்த நொடி பொழுதில் தானே இந்த சுவர் கரைந்து போனது, அந்த இடமும் தெரியவில்லை. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, அப்படியே விழித்து கொண்டான்.

பிரியமானவர்களே, நன்மைகள் பலவற்றை நாம் அனுபவிக்க முடியாதபடி நமது பாவங்கள் தடையாய் அமைகின்றன. அநேக ஆசீர்வாதங்களை நாம் இழந்து விடுகிறோம். ஆம், பாவம் நமது சந்தோஷத்தை, சமாதானத்தை தடுத்து விடுகிறது. குற்ற உணர்வற்ற மகிழ்ச்சியான வாழ்விற்கு பாவம் தடையாக வந்து நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பாவத்தினால் பரலோக இன்பத்தை நாம் அடைய முடியாது.

நாளைய தினம் நம்முடையதல்ல, ஆகவே இன்றே உங்களது பாவத்தை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ளுங்கள். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்ற நிச்சயத்தை பெற்று கொண்டவர்களே இவ்வுலகிலே பாக்கியவான்கள். உலகின் பெரும் பணக்காரர்களை காட்டிலும், உலக அழகிகளை காட்டிலும், பெரும் அரசியல் தலைவர்களை காட்டிலும் நாமே விசேஷித்தவர்கள். தேவனுடைய சொந்த பிள்ளைகள் என முத்திரையும் பெற்று விடுவோம்.

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று