யாருக்காய் வாழ்கிறாய் நீ

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
- (2 கொரிந்தியர் 4:17).

இரட்சண்ய சேனை சபையின் ஸ்தாபகர்  சகோ. வில்லியம் பூத் அவர்கள் எழுதிய ஒரு செய்தியில் தான் கண்ட ஒரு கனவை பற்றி  எழுதியிருக்கிறார். அக்கனவில் தன்னை ஒரு சாதாரண விசுவாசியாகவே கணடார். அதில் தான் மரித்து. பரலோகத்தில் நுழைவதை போன்ற காட்சிகளையும் கண்டார்.

அங்கே பரலோகத்தில் வில்லயம் பூத் ஜீவ புத்தகத்தை கண்டார். அந்த ஜீவ புஸ்தகத்தில் பதிவேட்டில் 'மன்னிக்கப்பட்டான்' என்ற வார்த்தை மட்டுமே பெரிதாக எழுதப்பட்டிருப்பதாக கண்டார். முதலில் அவர் தான் மன்னிக்கப்பட்டு  இப்போழுது பரலோகத்தில் இருப்பதற்காக பேரானந்தம் கொண்டார்.

ஆனால் பரலோகத்தில் வேறொரு விசுவாசிகளின் குழுவையும் கண்டார். அவர்களோ சொல்லி முடியா விசேஷித்த மகிமை கொண்டவர்களாய் இருந்தார்கள். யார் இவர்கள்? இந்த பூமியில் தங்கள் சொந்த ஜீவனை அருமையாய் எண்ணாதவர்கள்.

இவர்கள் ஆண்டவருக்காகவும் அவருடைய சபைக்காகவும், சகலத்தையும் இழந்தவர்கள். பணத்தை, பதவியை, கௌரவத்தை இன்னும் இவ்வுலகம் அதிக மதிப்புடையதாய் கருதும் யாவற்றையும் இவர்கள் இழந்து தியாகம் செய்திருந்தார்கள்.

இவர்களின் சொல்லி முடியா மகிமையை கண்ணுற்ற பூத் அவர்கள் மீது பொறாமை கொண்டார். அச்சமயத்தில் இயேசு (அவரது கனவில்) அருகில் வந்து, 'பூத் நீ காணும் இந்த சொல்லி முடியா மகிமையில் ஜொலிக்கும் இந்த ஜனங்களோடு ஒன்றாய் சேர்ந்து கொள்வதற்கு உன்னால் ஒரு போதும் முடியாது. ஏன் தெரியுமா? நீ இந்த மகிமையான ஜனங்களை போல் அல்லாமல், இந்த பூமியில் உனக்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய்' என மனம் வருந்தி கூறினார்.

வில்லியம் பூத் விழித்து கொண்டார். அப்பொழுது தான் இன்னமும் உயிரோடிருப்பதையும், தான் கண்டது கனவு என்றும் அறிந்தார். அன்றிலிருந்து எஞ்சியுள்ள தன் முழு வாழ்வையும் சுயநலமின்றி தன் ஆண்டவருக்கே வாழ்ந்து விட தீர்மானம் எடுத்தார்.

நம்மில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுகொண்டுள்ளோம், இரட்சிக்கப்பட்டுள்ளோம், அபிஷேகம் பெற்றுள்ளோம், ஆலயத்திற்கு செல்கிறோம், காணிக்கை கொடுக்கிறோம், பரலோகம் சென்று விடுவோம் என்ற நிச்சயமும் உண்டு.

அவற்றை தாண்டி ஒரு கருகலான் கிறிஸ்தவ சத்தியம் உண்டு. அது என்ன? 'ஒருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைதானே வெறுத்து தன் சிலுவையை எடுத்து கொண்டு அனுதினமும் என்னை பின்பற்றக்கடவன்' - (லூக்கா 9:23) என்பதே.

கிறிஸ்து எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியும், இன்னும் பணத்தினால் வரும கௌரவத்தையும், பதவியினால் வரும் கௌரவத்தையும் வாஞ்சித்து, இவ்வுலக வாழ்வின் மேன்மை நம்முள் வாழ்ந்து கொண்டிருக்குமேயானால் இன்னும் நாம் சுயத்தை சார்ந்தவர்களாகவும் நம்மை வெறுக்காதவர்களாகவும் காணப்படுகிறோம் என்பதே பொருள்.

பிரியமானவர்களே, நமது இருதயத்தில் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை தாண்டி கிறிஸ்துவின் சிந்தை உண்டா? நமக்காகவே நாம் வாழ்ந்தது போதும், சுயநலமின்றி கிறிஸ்துவின் சிந்தையோடு வாழ்வோம். அந்த சொல்லி முடியாத மகிமையுள்ள கூட்டத்தாரோடு நாமும் காணப்பட பிரயாசப்படுவோம்.

ஒரு வாழ்வு அதை நமக்காகவே வாழ்ந்து, நாம் சம்பாதித்ததை நாமே அனுபவித்து, பிறரது மதிப்பையும், பாராட்டையும் பெற்று,  வாழ்ந்த வாழ்வை விட்டு, தியாகத்தோடு கிறிஸ்துவின் சிந்தை நிறைந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போம். ஆமென் அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று